Monday, March 4, 2013

தேர்வு நாள் சிந்தனைகள்...!

அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்களின் தேர்வு காலம் இது. குறிப்பாக 12 ம் வகுப்பு மாணவ மாணவிகள் தங்கள் அரசு தேர்வுகளை முடிக்கும் நிலையிலும் பிற மாணவர்கள் இன்னும் சில தினங்களில் துவங்கவிருக்கும் தங்கள் தேர்வுகளுக்கான தயாரிப்புகளில் மும்முரமாக இருக்கும் இந்நேரத்தில் ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்திற்கும் சில அறிவுரைகள்.

தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவ மாணவியருக்கும் ஒற்றுமை இணையக்குழு துஆச் செய்கிறது அவர்கள் மகத்தான வெற்றிபெறுவதற்கு மனதார பாராட்டுகிறது.

பெற்றோருக்கு அறிவுரைகள்
1. தேர்வு என்றவுடனேயே மாணவர்களை பீதிக்குள்ளாக்கி அச்சுறுத்தும் நிலையைத்தான் நாடெங்கும் பார்க்கிறோம். தேர்வில் வெற்றி பெறுவதுதான் ஒரு மாணவனின் ஒட்டுமொத்த இலட்சியம் என்பதுபோன்ற ஒரு மாயை ஏற்படுத்தப் பட்டுள்ளது. நிச்சயமாக மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறத்தான் வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஆயினும் அல்லாஹ்விடம் தவக்குல், மற்றும் ஈமானிய நிலை இதன்மூலம் மறக்கடிக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது. பெற்றோர்களே! மறுமையில் வெற்றிபெறுவதைத்தான் ஒவ்வொரு முஸ்லிம் மாணவ மாணவியர்களின் முதல் குறிக்கோளாக போதிக்கப்படுவேண்டும். முஸ்லிம் மாணவர்களுக்கு இதைத்தான் முதல் இலட்சியமாக மனதில் பதிய வைக்கப்படவேண்டும். இவ்வுலக கல்விகளின் தேர்வுகள் அதை ஒப்பிடும்போது இரண்டாம் நிலையில்தான் வைக்கப்பட வேண்டும்.

2. மாணவர்கள் அரசுத் தேர்வில் வெற்றிபெற தவறிவிட்டாலோ அல்லது குறைந்த மதிப்பெண் எடுத்துவிட்டாலோ அவர்களின் பெற்றோர்கள் கடுமையாக திட்டித் தீர்ப்பதை நாம் பார்க்கிறோம். இதனால் தோல்வியுற்ற மாணவர்கள் கடும் சோர்வடைந்து, மனமுடைந்து இறுதியில் தற்கொலைக்குச் செல்கிறார்கள். அதைவிடுத்து குறைந்த மதிப்பெண் எடுப்பதற்கு என்ன காரணம் என்று ஆராயுங்கள். அந்த குறைகளை களைய முற்படுங்கள்.

3. அன்பின் பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை அவர்களின் சக நண்பர்களோடு ஒப்பிட்டு குத்திக் காட்டி பேசாதீர்கள். 'நீ என்ன மார்க்கெடுத்து கிழிச்சிருக்கிறாய், அதோ அந்த பிள்ளைய பாரு' என்ற வார்த்தைகள் உங்கள் பிள்ளைகளை தாழ்வுமனப்பான்மையை நோக்கி இட்டுச் செல்லும். இறுதியில் அந்த நண்பரை வெறுக்கும் நிலைக்கு கொண்டு சேர்க்கும்.

4. மாறாக உங்கள் பிள்ளைகளை உற்சாகப் படுத்துங்கள். அவர்களுக்கு தோழோடு தோழ்நின்று உதவுங்கள். விடியற்காலையில் எழுந்து படி என்று சொல்வதற்குப் பதிலாக நீங்கள் தஹஜ்ஜத் வேலையில் எழுந்து பிள்ளைகளையும் தொழுமாறு ஏவி அவர்களுக்காக தேநீர் போன்ற பானங்களை தயாரித்து கொடுத்துவிட்டு 'பார்த்தாயா நீ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பதற்காகவே உன்னோடு நானும் இந்த அதிகாலையில் விழித்திருக்கிறேன்' என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் பிள்ளைகள் அடையும் உற்சாகம் ஒருபக்கம் இருக்கட்டும் அல்லலாஹ்வின் அளப்பெரும் அருள் உங்கள்மீது இறங்கும், இதைவிட வேறு என்ன வேண்டும்.

5. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகள், உங்கள் பிள்ளைகளின் எதிர்கால கல்வி வாழ்க்கையை நிர்னயிக்கும் ஒரு முக்கிய கட்டம் என்பதை உணருங்கள். பெற்றோர்களே இந்த ஒரு மாதமாவது உங்கள் வீட்டு தொலைக்காட்சி ஷைத்தானை அனைத்து போடுங்கள். மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் தொலைக்காட்சி பார்ப்பது உங்கள் பிள்ளைகளுக்கு தொல்லை தரும், பிறகு அவர்களிடம் எப்படி நீங்கள் அதிக மதிப்பெண்களை எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?


மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகள்
மாணவ மாணவிகளே! நீங்கள் எவ்வாறு தேர்வு எமுதவேண்டும், இருநூறுக்கு இருநூறு எப்படி எடுப்பது, உங்களுக்காக தரப்பட்டுள்ள அந்த 3 மணி நேரத்தை எப்படி பயன்படுத்துவது போன்ற அபரிமிதமான தகவல்கள் உங்கள் பள்ளி ஆசிரியர்கள் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் உங்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஒரு சிலவற்றை மட்டும் குறிப்பாக நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.

1. உங்கள் பெற்றோர்கள் மற்றும் அசிரியர்களின் தியாகங்களை சற்று எண்ணிப் பாருங்கள். நீங்கள் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்பதற்காக அவர்கள் படும் கஷ்டங்கள்தான் எத்தனை எத்தனை. அது மட்டுமா உங்களை உற்சாகப்படுத்தி உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக எத்துனை எத்துனை சங்கங்கள் எத்தனை சமுதாய ஆர்வலர்கள், அதற்காக எவ்வளவு உடல் உழைப்புகள், எவ்வளவு பொருளாதார செலவுகள் செய்யப்படுகின்றன என்பதை உணருங்கள். இத்தனையும் தாண்டி நீங்கள் தேர்வில் வெற்றிபெறாமல் தோல்வியடைந்து வந்தால் உங்களுக்காக உழைத்தவர்களுக்கு செய்யும் நன்றிக் கடன் இதுதானா? உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக நீங்கள் அல்லவா முதலில் அக்கரை எடுக்கவேண்டும்.

2. இந்த முறை அரசுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெரும் சவாலாக வந்திருப்பது உலக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள். மாணவிகள் இக்கிரிக்கெட் சூதாட்டத்தை பார்ப்பது குறைவுதான் என்றாலும் பெரும்பாலான மாணவர்கள் அதில் வீழ்ந்துகிடப்பதை பார்க்கிறோம். மாணவர்களே நீங்கள் டிவியில் பார்க்கும் உங்கள் அபிமான விளையாட்டு வீரர்கள் அனைவரும் பெரும் கோடீஸ்வரர்கள். கோடியில் புரள்கிறவர்கள், பல கோடிகளுக்காக சூதாட்டத்தில் கூட ஈடுபட தயங்காத சுயநலவாதிகள். நாட்டில் மாபெரும் சூதாட்ட விளையாட்டாக சொல்லப்படும் இக்கிரிக்கெட்டை நீங்கள் தேர்வுகாலத்தில்கூட பார்த்துக்கொண்டிருந்தால் உங்களைவிட பெரும் நஷ்டவாளிகள் யார் இருக்க முடியும்?

3. மாணவிகள் மட்டும் என்ன எந்தவித தொந்தரவும் இல்லாமல் படிக்கமுடிகிறதா? அவர்களின் படிப்புகளில் மண்அள்ளி வைக்கும் முகமாக தெருக்கள்தோரும் மௌலிது, கந்தூரி என்று தொடர் கூச்சல்கள். இதோ உங்கள் வீட்டுபிள்ளை வந்துவிட்டேன் வரும் சட்டமன்ற தேர்தலில் எனக்கு வாக்களியுங்கள் என்று வீதிகளில் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள். இதற்கு மத்தியில்தான் மாணவிகளே நீங்களும் படிப்பில் (மட்டும்தான்) கவனம் செலுத்தவேண்டிய நிலை உள்ளது.

4. அரசு தேர்வு எழுதவிருக்கும் மாணவ மணவிகளே! தேர்வை எண்ணி நீங்கள் பதட்டப்படாதீர்கள், அல்லாஹ்விடம் தவக்கல் வைத்து தேர்வு எழுதச்செல்லுங்கள். தேர்வு எழுத ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் என்று நீங்கள் (மனதில் நினைத்தால் மட்டும் போதும் பிஸ்மியை விடத்தாள்களில் எழுதவேண்டிய அவசியமில்லை) ஆரம்பியுங்கள்.

5. முதலில் கேள்வித்தாளை ஒன்றுக்கு இருமுறை படித்துப் பாருங்கள். விடைகளில் தவறு ஏற்பட்டால் அதை அடித்து அடித்து எழுதாதீர்கள். தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுங்கள். சற்று யோசனை செய்துதான் விடை எழுத முடியும் என்ற, சிறு கேள்விகளுக்கு விடைதாள்களில் அதற்கான இடத்தை விட்டுவிட்டு அடுத்த கேள்விக்கு விரைவாக செல்லுங்கள்.

6. நீங்கள் வலமையாக பயன்படுத்தம் பேனா பென்சில்களையே தேர்வு எழுதுவதற்கும் பயன்படுத்துங்கள். புதிய பேனாக்கள் தேவையில்லை. தேர்வு எழுதியவுடன் நீங்கள் எழுதியது சரிதான என்பதை இறுதியில் மறுபடியும் படித்துப்பாருங்கள்.
 
குறிப்பு : படிப்பு ஏறாத பிள்ளைகள்தான் டியூஷன் படிப்பது என்ற நிலை மாறி டியூஷன் ஒரு பேஸனாக மாறியுள்ள காலம் இது. பெண் டியூஷன் மாஸ்டர்கள் இல்லாத காரணத்தால் வயதிற்கு வந்த நமது பெண் பிள்ளைகள் ஆண் ஆசிரியர்களிடம் படிக்கும் சூழ்நிலை தற்போது உள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை நாம் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. எனவே நமது சமூகத்தில் பெண் ஆசிரியைகள், பெண் டியூஷன் மாஸ்டர்களை உருவாக்குவதற்கு பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்பதை இந்நேரத்தில் கோரிக்கையாக வைத்து முடிக்கிறோம்.